என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்"
கரூர்:
பாராளுமன்ற தேர்தலையொட்டி கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் வடிவேல்நகர் அரசு உயர் நிலைபள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 130-வது வாக்குச்சாவடியில் எனது வாக்கை பதிவு செய்துள்ளேன். காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை முடிவு செய்யும் தேர்தலாக இருக்கிறது. எங்கள் வேட்பாளர் தம்பிதுரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று உறுதியாகியுள்ளது.
கரூர் பாராளுமன்ற தொகுதி பதற்றமான தொகுதி கிடையாது. அமைதியான தொகுதிதான். தமிழகம்-புதுச்சேரியில் 39 தொகுதிகளிலும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.
பாராளுமன்ற தேர்தல் பொது விடுமுறையையடுத்து சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றும் ஏராளமான தொழிலாளர்கள் நேற்று ஒரே நாளில் சொந்த ஊருக்கு புறப்பட்டதால் பயணிகளுக்கு சற்று சிரமம் ஏற்பட்டது. தீபாவளி, பொங்கல் பண்டிகை நேரங்களில் 3, 4 நாட்களுக்கு முன்னதாகவே புறப்பட்டு செல்வார்கள். ஆனால் நேற்று பணி நாள் என்பதால் தொழிலாளர்கள் பணியை முடித்து விட்டு ஒரே நேரத்தில் புறப்பட்டனர். இதனால் சற்று பாதிப்பு ஏற்பட்டது. இது தவிர்க்க முடியாதது. சொந்த ஊருக்கு சென்ற பொதுமக்கள் மீண்டும் திரும்புவதற்கு சிரமம் இருக்காது. அதற்கேற்றாற் போல் . பயணிகளின் கூட்டத்தை பொறுத்து பஸ்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #ministermrvijayabaskar #admk #TNElections2019
கரூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசியதாவது:-
தமிழகத்தில் 2000 மின்சார பஸ்களும்,12,000 காற்று மாசுபடாத அதி நவீன புதிய பஸ்களும் இயக்கப்பட உள்ளது. 3 வருட காலத்திற்குள் இந்த பஸ்கள் இயக்கப்படும். முதல் கட்டமாக 500 மின்சார பஸ்கள் சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகராட்சியில் விரைவில் இயக்க முதல்வர் சி.40 அமைப்புடன் ஒப்பந்தம் போட்டுள்ளார்.
முதல் கட்டமாக சென்னை மாநகராட்சியில் 50 குளிர் சாதன பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வரும். புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். தே.மு.தி.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார். #ACBus #MRVijayabaskar
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம், குளித்தலை, தோகைமலை மற்றும் கடவூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் பழைய காலனி வீடுகளை பழுது நீக்கி கொள்ளுவதற்கான நிதியுதவி மற்றும் வேலை உத்தரவு ஆணை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். பாராளுமன்ற துணை சாபநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயாபாஸ்கர் கலந்து கொண்டு பழைய காலனி வீடுகளை பழுது நீக்கி கொள்ளுவதற்கான நிதியுதவி மற்றும் வேலை உத்தரவுகளை வழங்கினர்.
அப்போது இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவிக்கையில்,
கரூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட காலனி வீடுகளை பழுது நீக்கித் தர அதிகளவில் கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன. பழைய வீடுகளை பழுது நீக்க சட்டமன்ற மேம்பாட்டு நிதியை மட்டுமே பயன்படுத்தப்பட்டது. தற்போது தமிழ்நாடு முதல்–அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று சிறப்பு நிதி பெற்று ஒரு வீட்டிற்கு ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 300 வீடுகளும், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் 350 வீடுகளும், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் 150 வீடுகளும், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் 300 வீடுகளும், குளித்தலை ஊராட்சி ஒன்றியத்தில் 130 வீடுகளும், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 300 வீடுகளும், கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் 250 வீடுகளும், தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தில் 314 வீடுகளும் என மொத்தம் 2094 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு அதற்காக ரூ.10 கோடியே 47 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து வேலை உத்தரவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி குளித்தலை, கிருஷ்ணராயபுரம், தோகைமலை, கடவூர் ஆகிய ஊராட்சி பகுதிகளில் 994 வீடுகளுக்கு ரூ.4 கோடியே 97 லட்சம் மதிப்பிலான வேலை உத்தரவுகள் வழங்கப்படுள்ளது. மீதமுள்ள பகுதிகளுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ.கீதா, வருவாய் கோட்டாட்சியர் லியாகத், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் உமாசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரி, மனோகரன், தவமணி, ராஜேந்திரன், வட்டாட்சியர்கள் சுரேஷ்குமார், கற்பகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.#MRVijayabaskar
இந்த கூட்டத்திற்குப்பின் அமைச்சர் எம் ஆர் விஜய பாஸ்கர் கூறுகையில் ‘‘பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாடு முழுவதும் 24,708 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து 14,263 பேருந்துகள் இயக்கப்படும். இந்த சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு மையம் ஜனவரி 9-ந்தேதி திறக்கப்படும். பொங்கல் முடிந்து சென்னைக்கு திரும்புவதற்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.
கரூர்:
கரூரில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போதே மத்திய அரசு கொண்டு வரும் மோட்டார் வாகன திருத்த சட்டத்தை கடுமையாக எதிர்த்தார்.
மேலும் அதில் தமிழகத்தின் உரிமைகளை பாதிக்கக் கூடிய ஷரத்துக்களை நீக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை அதிகாரிகளோடு சேர்ந்து மத்திய தரைவழி போக்குவரத்து துறை மந்திரி நிதின்கட்கரியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். மேலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது சம்பந்தமாக பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் உறுப்பினர்களும் மனு கொடுத்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வரும் மோட்டார் வாகன திருத்த சட்டத்திலுள்ள 184 ஷரத்துக்களில், 5 ஷரத்துக்கள் தமிழகத்தின் உரிமையை பாதிக்கக்கூடியதாக உள்ளது. இதில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என கூறியுள்ளோம்.
திருத்தப்படா விட்டால் பாராளுமன்றத்தில் இந்த சட்டத்தை எதிர்த்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் குரல் எழுப்புவார்கள்.
போக்குவரத்து கழகத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை ஏதும் இல்லை. ஊதிய உயர்வு, டீசல் விலை உயர்வு போன்றவற்றை சமாளித்து தான் போக்குவரத்து கழகத்தை இயக்கி வருகிறோம். தேவையில்லாத இடங்களில் பணியாற்றுபவர்களை தேவையுள்ள இடங்களில் பணி மாற்றம் செய்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். #ministermrvijayabaskar #pongalfestival
கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி அ.ம.மு.க. நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணையும் விழா தளவாபாளையத்தில் நடந்தது. இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த அமாவாசைக்குள், அடுத்த அமாவாசைக்குள் அ.தி.மு.க. ஆட்சி கலைந்து விடும் என்றவர்களின் கனவை பொய்யாக்கி கடுமையான விமர்சனங்களையும் கடந்து இந்த ஆட்சி தொடர்கிறது.
ஆனால் ஜெயலலிதா ஆன்மா அவரை பிடித்து பெங்களூர் சிறையில் போட்டு விட்டது. எனவே ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள் எந்த கட்சிக்கு சென்றாலும் அவர்களையும் ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது.
இவ்வாறு அவர் கூறினார். #Jayalalithaa #Sasikala #MRVijayabaskar
கரூர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் அ.ம.மு.க.வை சேர்ந்த பலர் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்னிலையில் அ.தி.மு.க. வில் இணைந்தனர். பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அ.ம.மு.க.வில் இருந்து விலகி தாய் கழகமான அ.தி.மு.க.வில் தொண்டர்கள் பலர் தங்களை பெருந்திரளாக இணைத்து கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க. கரை வேட்டியை கழற்றி விட்டு, மாற்று உடுப்பாக தி.மு.க. வேட்டியை கட்ட நாங்கள் தயாராக இல்லை என அவர்கள் தெரிவித்தது பெருமிதமாக உள்ளது.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் எந்த இயக்கத்தை எதிர்த்தனரோ, அதில் போய் அவர் ஐக்கியமாகியிருப்பது அவரது தாய்கழகமான தி.மு.க.வில் இணைந்தது போல் உள்ளது. தற்போது அ.ம.மு.க. என்பது பீஸ் போனது போல் ஆகி விட்டதாக தெரிகிறது. அதைவிட்டு ஐ-வோல்ட் மின்சாரம் என டி.டி.வி. தினகரன் கூறுவது நகைப்புக்குரியது. 1½ கோடி தொண்டர்களுடன் அ.தி.மு.க. மாபெரும் இயக்கமாக உள்ளது.
இதிலிருந்து உண்மை தொண்டர்கள் ஒருவரும் மாற்று கட்சிக்கு செல்லவில்லை. எப்போது தேர்தல் வந்தாலும் அதில் வெற்றி பெறும் வகையில் கரூர் மாவட்டத்தில் தேர்தல் களப்பணி சீரிய முறையில் இருக்கும். அ.தி.மு.க. மூழ்கும் கப்பலா? என்ற விமர்சனத்துக்கு வெற்றிகனியை பறித்து பதில் கொடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார். #SenthilBalaji #MRVijayaBaskar
கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைச்சர்கள் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து மரங்களை அப்புறப்படுத்துதல், மின் கம்பங்களை மாற்றியமைத்தல் உள்ளிட்ட பல்வேறு சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்தும் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளையும் துரிதப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் கந்தர்வக்கோட்டை பகுதிகளில் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், டாக்டர். சி.விஜயபாஸ்கர், பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் கொட்டும் மழையிலும் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் அருகே சாய்ந்து கிடந்த மின் கம்பங்களை அகற்றி ஜே.சி.பி. எந்திரங்களின் உதவியுடன் புதிய மின்கம்பங்களை நடும் பணிகளில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், பணிகளில் எந்தவித தொய்வுமின்றி மிகவும் சிறப்பாக பணியாற்றிக்கொண்டிருந்தை பார்வையிட்ட அமைச்சர்கள், மின்வாரிய ஊழியர்களை பாராட்டினர்.
அப்போது அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் கூறியதாவது:-
கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்வர், துணை முதல்வர் உத்தரவின்படி அமைச்சர்கள் தொடர்ந்து நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மின் கம்பங்களை சீரமைக்கும் பணிகளுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா மாநிலங்களில் இருந்தும் மின்வாரிய பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றது.
துணை முதல்வர் புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரனூர், அடப்பங்கரை சத்திரம், கந்தவர்வக்கோட்டை, பந்தக்கோட்டை, மருதன்கோன்விடுதி உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து, அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளார்.
தற்போதுகூட கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள புதுக்கோட்டை கந்தர்வக்கோட்டை பிரதான சாலையில் சாய்ந்து கிடந்த மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் கேரள மாநிலத்தில் இருந்து மின்சார வாரிய கண்காணிப்பு பொறியாளர் மோசஸ்ராஜ்குமார் தலைமையில் 26 பேர் அடங்கிய குழுவினர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஈடுபட்டுள்ளனர்.
இதுபோன்று மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்துப்பகுதிகளிலும் மின்கம்பங்கள் சீர்செய்து மின் விநியோகம் வழங்கும் பணியும், சாய்ந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தும் பணியும், பாதிக்கப்பட்ட பயிர்கள், வீடுகள் குறித்த சேத மதிப்பீடுகளை கணக்கெடுக்கும் பணியும், குடியிருப்புகளுக்கு சுழற்சி முறையில் குடிநீர் விநியோகம் செய்யும் பணியும், பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பணியும் போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நகரப்பகுதியில் 90 சதவீத புதிய மின் கம்பங்கள் நடப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டுவிட்டது. கிராமப்பகுதிகளில் சுமார் 45,000-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதால், அவற்றை சீர்செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இன்னும் ஓரிரு தினங்களுக்குள் பெரும்பான்மையான பகுதிகளுக்கும் முழுமையாக மின் விநியோகம் செய்யும் வகையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஷம்பு கல்லோலிகர், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர். #GajaCyclone
தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட செல்லும் மக்கள் வசதிக்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் 6 இடங்களில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் புறப்பட்டு செல்கின்றன. கடந்த 3 நாட்களில் 5½ லட்சம் பயணிகள் சென்னையில் இருந்து பயணம் செய்துள்ளனர். இதன்மூலம் ரூ.6 கோடியே 84 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
சிறப்பு பஸ்கள் இயக்கத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். 3 நாட்களாக அவர் நள்ளிரவு வரை அனைத்து பஸ் நிலையங்களுக்கும் சென்று மக்கள் தேவையறிந்து பஸ்களை இயக்க உத்தரவிட்டார்.
தாம்பரம் ரெயில் நிலைய பஸ்நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் கூடுதலாக 200 சிறப்பு பஸ்களை இயக்க அமைச்சர் உத்தரவிட்டார்.
ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது.
நேற்று 1413 ஆம்னி பஸ்களில் அதிகாரிகள் தமிழகம் முழுவதும் சோதனை நடத்தினர்.
லைசென்சு, பதிவு சான்று எப்.சி. இல்லாமல் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கிய ஆம்னி பஸ்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் அபராதமும் விதிக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.31 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. 4 ஆம்னி பஸ்கள் பெர்மிட் இல்லாமல் இயக்கப்பட்டதால் அந்த பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதவிர 11 பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அந்த பஸ்களில் பயணம் செய்த பயணிகளிடம் போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரித்த போது, வழக்கமான கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கப்பட்டதால் கூடுதல் கட்டணத்தை திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுத்தனர்.
பயணிகளிடம் கூடுதலாக பெறப்பட்ட டிக்கெட் கட்டணத்தை ஆம்னி பஸ் ஆபரேட்டரிடம் இருந்து பெறப்பட்டு திருப்பி கொடுக்கப்பட்டது. போக்குவரத்து துறை ஆணையர் சமயமூர்த்தி, இணை ஆணையர் முத்து ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் நடந்த சோதனையில் கூடுதல் கட்டணம் திருப்பி கொடுக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தீபாவளி சிறப்பு பஸ்களில் மக்கள் சிரமமின்றி பயணம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நேற்று வரை சுமார் 5½ லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இன்று 2 லட்சம் பேர் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
அதிக கட்டணம் வசூலிக்கப்படும் ஆம்னி பஸ்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 11 ஆம்னி பஸ்களில் இருந்து கூடுதல் கட்டணம் திரும்ப பெறப்பட்டுள்ளது. 4 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார். #OmniBuses
கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, மண்மங்கலம், நன்னியூர், வாங்கல்குப்புச்சி பாளையம், நெரூர் வடக்கு, நெரூர் தெற்கு ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் ரூ. 3 கோடியே 20 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது. கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பேசினார்.
ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில், ரெட்டிபாளையம் பஸ்ஸ்டாப் முதல் பொன்நகர் வரை புதியதிசை மாற்று வடிகால் அமைக்கும் பணி ரூ.14.03 லட்சம் மதிப்பிலும், ஆப்பிள் பாரடைஸ் (கோவை ரோடு) பகுதியில், என்.ஜி.எம். ரோடு முதல் ஆப்பிள்பாரடைஸ் வரை பேவர் பிளாக் அமைக்கும் பணி ரூ.6.40 லட்சம் மதிப்பிலும், கோவை மெயின்ரோடு ஆண்டனி பள்ளி முதல் பி.கே.ஜி நகர் கல்வெர்ட் வரை புதிய திரை மாற்றுவடிகால் அமைக்கும் பணி ரூ.27.44 லட்சம் மதிப்பிலும், சாந்தி நகர் (ஈரோடு ரோடு) பகுதியில், சாந்திநகர் சாலை மேம்பாடு செய்யும் பணி ரூ.25.30 லட்சம் மதிப்பிலும் பூமி பூஜை நடந்தது. இதபோன்று பல்வேறு பகுதிகளில் திட்டப்பணிகள் நடந்தன.
முன்னதாக, பிரேம் மஹாலில் மகாத்மா காந்தியின் 150&வது பிறந்தநாளை முன்னிட்டு சத்தான உணவு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உணவு பாதுகாப்புத்துறையின் மூலம் நடைபெற்ற சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கீதா எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரமேஸ்வரன், செல்வி, பாலச்சந்தர், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், காளியப்பன், திருவிக, கமலக்கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். #MRVijayaBhaskar #ADMK
போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு மாநில அரசுக்கு தரவேண்டிய நிதியை கேட்டு பெறுவதில் எந்த தவறும் இல்லை. இதற்கு தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய நினைத்தால் எந்த மாநிலத்திலும் ஆட்சி நடக்காது.
குறிப்பாக தொழிலாளர்கள் அதிகம் நிறைந்துள்ள கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் எந்தவித சிரமமும் இன்றி செல்ல கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
தீபாவளியன்று குழந்தைகள் பட்டாசு வெடிக்க ஆர்வமாக இருப்பார்கள். பெற்றோர்கள் அவர்களுடன் இருந்து பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். எனக்கு தீபாவளி பண்டிகை கோயம்பேட்டில் தான்.
நான் நாளை முதல் சென்னையில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பஸ்களின் சேவையை கண்காணிக்க உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார். #Diwali #Vijayabhaskar
தீபாவளி பண்டிகையையொட்டி அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாட நெரிசல் இல்லாமல் பயணம் மேற்கொள்ள சிறப்பு பேருந்துகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
நவம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து 4,542 சிறப்பு பேருந்துகள் உள்பட 11,367 பேருந்துகளும் பிற மாவட்டங்களில் இருந்து 9200 பேருந்துகளும் என மொத்தம் 20,567பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு பயணிகள் சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு செல்ல ஏதுவாக நவம்பர் 7 முதல் 10-ந் தேதிவரை சிறப்பு பேருந்துகள் விடப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துகளில் 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிகமாக செல்லக் கூடிய பேருந்துகளுக்கு முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.
சுமார் 1000 பேருந்துகளுக்கு 2 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்யலாம். தீபாவளி பயணத்திற்கான முன்பதிவு இன்று தொடங்கியது. இதனை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று தொடங்கிவைத்தார்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 சிறப்பு முன்பதிவு கவுண்டர்கள் திறக்கப்பட்டன. இதே போல தாம்பரம் பேருந்து நிலையத்தில் 2 கவுண்டர்களும், பூந்தமல்லியில் ஒரு கவுண்டரும், மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் ஒரு கவுண்டரும் என மொத்தம் 30 சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டு முன்பதிவு செய்யும் பணி தொடங்கியது.
சென்னையில் இருந்து செல்வதற்கு மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்து திரும்பவும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கினாலும் 60 நாட்களுக்கு முன்னதாக அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கு முன்பதிவு செய்யும் திட்டம் உள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய 62,219 பேர் இதுவரை முன்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் இருந்து மட்டும் பயணம் செய்ய 39,490 பேர் முன்பதிவு செய்து இருக்கிறார்கள். இன்று முதல் இந்த எண்ணிக்கை உயரும். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து பேருந்துகளை அதிகரிப்போம். 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் செல்லும் பேருந்துகளுக்கு மட்டும்தான் முன்பதிவு செய்யப்படும். அதற்கு குறைவான தூரங்களில் இயக்கப்படும் பேருந்துகளுக்கு பயணிகளுக்கு டோக்கன் வழங்கி நெரிசல் இன்றி பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல் இல்லாமல் தீபாவளி சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் மட்டுமே புறப்பட்டு செல்லும். தாம்பரம் (மெப்ஸ்) பேருந்து நிலையத்தில் விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர், செல்லும் பேருந்துகள் புறப்பட்டு செல்கின்றன. தாம்பரம், ரெயில் நிலைய பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் புறப்பட்டு செல்லும்.
பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து காஞ்சீபுரம், செய்யாறு, வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்துர், ஓசூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து ஈ.சி.ஆர். மார்க்கமாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் புறப்பட்டு செல்லும்.
மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் புறப்பட்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #Diwali #SpecialBuses
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்